

கருணையே வடிவான சிவபெருமான் சுகப்பிரம்ம ரிஷிக்கு காட்சியளித்தார். சுகப்பிரம்ம ரிஷி பக்திபெருக்குடன் சிவபெருமானை பணிந்தார். சிவபெருமானிடம் இப்பிறவி பயனை அடைந்துவிட்டேன் எனக்கு முக்தி அளிக்க வேண்டுமென்று பணிந்து நின்றார். அப்பொழுது சிவபெருமான் வேதசுவடிகள் சிலவற்றை கொடுத்து இதனை பாதுகாப்புடன் வைத்திருக்குமாறும், இவ்வுலகில் அவதரித்துள்ள ராமபிரான் தன் மனைவி சீதையை மீட்க இலங்கை செல்லுமுன் இராமேஸ்வரத்தில் எம்மை வணங்கி ஆசி பெற்று சென்றார். அதேபோல் அவர் சீதையை மீட்டு வரும்பொழுது இத்தலத்தின் வழியாக வருவார்கள், மலையாக வடிவெடுத்துள்ள எம்மை தரிசனம் செய்வார்கள். அப்பொழுது அவர்களின் மனம் சாந்தி அடையவும், புனிதம் பெறவும் இந்த வேதசுவடிகளில் உள்ள வேதங்களை ஓத அளிக்குமாறு ஆணையிட்டார்.
பிறகு ஆகாய மார்க்கமாக சூரிய மண்டலத்தையடைந்து இவ்வுடலை விட்டு முக்தி அடைவாய் என அருளினார். இதனை கேட்ட சுகப்பிரம்ம ரிஷி மகிழ்ச்சியுடன் அச்சுவடிகளை பெற்றுக்கொண்டார். பின்னர் மலைச்சாரலில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். இன்றும் மலையின் பாதியில் உள்ள குகையில் உள்ளது.
சிவபெருமான் கூறியதுபோல் இலங்கையிலிருந்து திரும்பிய ராமர், சீதை, லஷ்சுமணன், அனுமன், ஆகியோர் இத்தலத்தின் வழியே வரும்பொழுது மலையே உருவாகிய ஈசனை பணிந்தனர். அப்பொழுது "சுகப்பிரம்ம ரிஷி" சிவபெருமான் கூறியதை எடுத்துரைத்து அந்த வேத சுவடிகளை ராமபிரானிடம் அளித்தார். இந்த வேதங்களை பெற்ற ராமர் மார்பில் கைவைத்து வில்லின்றி அமர அனுமன் முன் அமர்ந்து வேதங்களை படித்தார். இதனை சிந்தையில் நிறுத்திய ராமர் மன அமைதியும்,புனிதமும் பெற்றார். இதனால் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். ஆகவே தீர்க்காசல ஈசனை பணிவோர் அனைவரும் மன அமைதி பெறுவது மட்டுமல்லாமல் முக்தி பேருஅடைவர்.
ஆலய திருப்பணிகளும், மன்னர்களும்
தீர்க்காசல ஈஸ்வரன் ஆலய திருப்பணிகள் பல்வேறு மன்னர்களின் ஆட்சிகாலத்தில் செம்மையாக நடைபெற்றுள்ளது. இவ்வாலயத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்ததில்
1 திரிபுவன சக்கரவர்த்தி
2 சுந்தர பாண்டியன்
3 அச்சுத விஜயராகவ நாயக்கர்
4 வீரவேங்கடபதி
ஆகிய மன்னர்கள் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளனர். பல நூற்றாண்டுகள் கடந்த இந்த ஆலயம் மன்னர்களின் ஆட்சி மாற்றத்தால் நாளடைவில் சிதிலமடைந்து அதன் கல்மண்டபங்கள் இடிந்து விழுந்து விட்டது. அக்கால கலைநுணுக்கத்துடன் கூடிய ஆலயத்தின் முகப்பு மண்டபம் முற்றிலுமாக சரிந்து விட்டது.
பின்னர் சில ஆன்மீக தொண்டர்கள் இவ்வாலயத்தின் சிறப்பும், பெருமையும் அறிந்து இதனை சீர்படுத்த திருப்பணிகளை மேற்கொண்டனர். இதன்படி திருப்பணிகள் நடைபெற்று பாழ் அடைந்த திருக்கோவில் புதுப்பொலிவு பெற்றது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் 4 - 3 -2006 அன்று சிறப்புடன் நடைபெற்றது.